Blogger Widgets

பக்கங்கள்

சனி, 14 செப்டம்பர், 2013

ரீஸ்டார்ட் ஆகும் கம்ப்யூட்டர்

1. உங்கள் கம்ப்யூட்டர், இயக்கத்தில் சூடு அடைகிறது. ஏர் கண்டிஷனர் குளிரில் இருந்தாலும் உள்ளே சூடு உருவாகிக் கொண்டு தான் இருக்கும். அந்த சூட்டின் நிலை 60 டிகிரி செல்சியஸைத் தொடுகையில் கம்ப்யூட்டரின் சிபியு தானாக ரீஸ்டார்ட் ஆகும் வகையில் தான் அமைக்கப்பட்டிருக்கும்.  எதனால் சூடு ஏற்படுகிறது? கம்ப்யூட்டரில் உள்ள டிஜிட்டல் சாதனங்கள் அப்படிப்பட்டவையே. அவை இயங்கும் போது நிச்சயம் வெப்ப ஆவி உருவாகி வெளியே வருகிறது. அதனால் தான் ப்ராசசர் சிப் மேலாக ஒன்றும் கேபினட் உள்ளாக ஒன்றும் என மின்விசிறிகள் அமைக்கப்பட்டு அவை அந்த வெப்பத்தை வெளியேற்றுகின்றன.

மேலும் இப்போதெல்லாம் இயக்கப்படும் புரோகிராம்கள் பெரிய அளவில் ப்ராசசரின் சக்தியை உறிஞ்சும் வகையில் உள்ளதால் சூடு அதிகம் உருவாகும் நிலை ஏற்படுகிறது. எடுத்துக் காட்டாக ஐ–ட்யூன்ஸ் மற்றும் விண்டோஸ் மீடியா பிளேயர் போன்ற வீடியோ ஆடியோ புரோகிராம்கள் அதிக சக்தியைப் பயன்படுத்துகின்றன. அதே போல் பல புரோகிராம்களை ஒரே நேரத்தில் பயன்படுத்தினாலும் இந்த பிரச்சினை வரும். அடுத்ததாக அளவுக்கதிகமாக கம்ப்யூட்டர் கேபினுள் சேரும் தூசியும் சூடு வெளியாவதைத் தடுக்கும். சூட்டை வெளித் தள்ளும் மின்விசிறிகள் சரியான அளவில் இயங்குவதைத் தடுக்கும். இவற்றை அவ்வப்போது நீக்க வேண்டும். கேபினைத் திறந்து தூசியை வெளியே எடுக்கும் சாதனம் கொண்டு கேபினைச் சுத்தம் செய்திட வேண்டும்.

சூடு அதிகமாவதெல்லாம் என் கம்ப்யூட்டரில் இல்லை; இருந்தாலும் ரீ ஸ்டார்ட் ஆகிறது என்றால் அடுத்தபடியாக உங்கள் கம்ப்யூட்டரின் மெமரியைச் சோதனை செய்திட வேண்டும். உங்கள் ப்ராசசர் ராம் மெமரியின் சேதமடைந்த இடத்தில் உள்ள டேட்டாவினைப் பெற முயன்று தோற்றால் கம்ப்யூட்டர் உடனே ரீஸ்டார்ட் ஆகத் தொடங்கும். இதனைக் கண்டறிய உங்கள் ராம் மெமரி ஸ்டிக்குகளை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தால் எந்த ஸ்டிக்கில் பிரச்சினை உள்ளது என்று தெரியவரும். அதனை மட்டும் மாற்றலாம்.

இதுவும் சரியாக உள்ளது என்று தெரிய வந்தால் கம்ப்யூட்டரில் உள்ள செட்டிங் ஒன்றை மாற்றினால் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும். விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் உள்ள ஒரு பகுதியில் சிஸ்டம் எர்ரர் ஏதேனும் ஏற்பட்டால் உடனே ரீஸ்டார்ட் செய்யும்படி அமைக்கப்பட்டிருக்கும். அந்த ஆப்ஷனை ஆப் செய்துவிட்டால் இந்த பிரச்சினை தீரும். இதனை மேற்கொள்ள Start, Control Panel என்று சென்று Performance and Maintenance என உள்ளதில் கிளிக் செய்திடவும். இதில் உள்ள System  லிங்க்கில் கிளிக் செய்து பின் Advanced  டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இதில் உள்ள Startup and Recovery செக்ஷனில் Settings  பட்டனில் கிளிக் செய்திடவும். இதில் “Automatically Restart,” என்று தரப்பட்டு அதன் அருகே தரப்பட்டுள்ள சிறிய கட்டத்தில் உள்ள டிக் அடையாளத்தின் மீது கிளிக் செய்து அதனை எடுத்துவிடவும். இது System Failure பிரிவில் இருக்கும். பின் ஓகே கிளிக் செய்து அனைத்து விண்டோக்களை மூடவும். இனி உங்கள் கம்ப்யூட் டர் எர்ரர் ஏற்படுவதனால் ரீஸ்டார்ட் ஆகாது.

இந்த செட்டிங்கை விண்டோ விஸ்டாவில் எப்படி செயல்படுத்துவது என்று பார்க்கலாம். Start>Control Panel சென்று “System” என்பதில் கிளிக் செய்திடவும்.  (இதனைப் பெற நீங்கள் கிளாசிக் வியூவில் இருக்க வேண்டும்) இந்த விண்டோவில் “Advanced System Settings” என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது கிடைக்கும் விண்டோவில் “Startup and Recovery” என்பதன் கீழ் பார்க்கவும். இங்கு “Settings”  பட்டனில் கிளிக் செய்திடவும். இதில் “Automatically Restart”  என்பதன் கீழாக என்பதில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியே வரவும்.

அநேகமாக மேலே சொன்னவற்றில் இந்த ரீஸ்டார்ட் பிரச்சினை தீர்ந்துவிடும். இருப்பினும் நன்மையும் தீமையும் பிறர் தர வரா என்ற பழமொழிக்கு ஏற்ப நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் அண்மையில் என்ன செய்தீர்கள் என்று பார்க்கவும். ஏதேனும் ஒரு புதிய சாப்ட்வேர் தொகுப்பு ஒன்றை நிறுவியிருக்கலாம். அல்லது ஹார்ட்வேர் சாதனம் ஒன்றை இணைத்திருக்கலாம். அப்படியானால், அதனை நீக்கிப் பார்க்கவும். பிரச்சினை தொடர்கிறதா என்று கவனிக்கவும். மீண்டும் பிரச்சினை இருந்தால் இணைத்த ஹார்ட்வேர் சாதனத்திற்கான புதிய டிரைவர் தொகுப்பினை அதனைத் தயாரித்து வழங்கிய நிறுவனத்தின் தளத்திலிருந்து இறக்கிப் பதியவும்.

இந்த ரீஸ்டார்ட் பிரச்சினை ஏதேனும் வைரஸ் அல்லது ஸ்பைவேர் தொகுப்பினாலும் ஏற்பட 100 சதவிகித வாய்ப்புண்டு. எனவே நீங்களாகக் கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்து அண்மையில் அப்டேட் செய்யப்பட்ட ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினை ஸ்பைவேர் கண்டறியும் தொகுப்பினையும் இயக்கிப் பார்க்கவும்.  அடுத்ததாக கண்ட்ரோல் பேனல் சென்று அதில் உள்ள ஆட்/ரிமூவ் புரோகிராம் பிரிவிற்கான ஐகானில் கிளிக் செய்து உங்களுக்குத் தற்சமயம் தேவையில்லாத புரோகிராம்களை நீக்கவும். தேவையற்ற புரோகிராம்களை அன் இன்ஸ்டால் செய்வதும் ரீஸ்டார்ட் பிரச்சினைக்கு ஒரு மருந்தே.

உங்களுக்குப் பிடித்தமான வீடியோவினைப் பார்த்துக் கொண்டிருக்கையில், இசையைக் கேட்டுக் கொண்டிருக்கையில், நண்பருடன் சேட்டிங் செய்து கொண்டிருக்கையில், பிரியமான கடிதத்தினைத் தயார் செய்து கொண்டிருக்கையில் கம்ப்யூட்டர் தானாக ரீஸ்டார்ட் செய்தால் நிச்சயம் என்ன கொடுமைடா என்று எண்ணத் தோன்றும். எனவே மேலே குறிப்பிட்ட வழிகளை ஒவ்வொன்றாகச் செயல்படுத்திப் பார்த்து பிரச்சினைக்குத் தீர்வு காண்பதுவே புத்திசாலித்தனம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக