Blogger Widgets

பக்கங்கள்

திங்கள், 20 மே, 2013

வருகிறது "விண்டோஸ் புளு'


விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் சென்ற ஆண்டு அறிமுகப்படுத்தப்படுகையில், உலகில் 67 கோடி கம்ப்யூட்டர்களில், விண்டோஸ் 7 பயன்படுத்தப்படுவதாகவும், இவை யாவும், விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு மாறிவிடுவார்கள்' என்று நம்பிக்கையுடன் கூறினார், மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை நிர்வாகி பால்மெர். ஆனால், அவர் எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை. பல மூலைகளிலிருந்து விண்டோஸ் 8 சிஸ்டத்தின் பல்வேறு கூறுகளுக்கு எதிர்ப்பு வந்தது. குறிப்பாக, ஸ்டார்ட் மெனு இல்லாதது குறையாகச் சொல்லப்பட்டது. பொது ஜன தொடர்பு நிறுவனங்கள் மூலம், மைக்ரோசாப்ட் மக்களிடம் தன் புதிய சிஸ்டத்தினைக் கொண்டு செல்லப் பார்த்தது. எந்த முயற்சியும் பலனளிக்காததால், தற்போது விண்டோஸ் 8 சிஸ்டத்தில் பல மாற்றங்களை மேற்கொண்டு, புதிய மேம்படுத்தப்பட்ட பதிப்பினை விண்டோஸ் புளு என்ற பெயரில் வெளியிட இருப்பதாகச் செய்திகள் வந்தன. தற்போது விண்டோஸ் 8.1 என அது வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டார்ட் பட்டனை நீக்கியது, அதற்குப் பதிலாகச் சதுர கட்டங்கள் வழி அப்ளிகேஷன் புரோகிராம்களைத் தந்தது, கம்ப்யூட்டர் இயக்கம் தெரிந்தவர்கள் கூட புதிய விஷயங்களைச் சிரமம் எடுத்து கற்க வேண்டிய நிலை ஆகியவற்றால், விண்டோஸ் 8 எதிர்பார்த்தபடி மக்களை அடையவில்லை. துரதிருஷ்டவசமாக, மைக்ரோசாப்ட் நிறுவனம் இதனை உணர்ந்து கொள்ள ஆறு மாதம் பிடித்தது. மேலும், பல நிறுவனங்கள் தங்கள் பழைய விண்டோஸ் சிஸ்டத்திலேயே இயங்க முடிவெடுத்தன. இன்னும் பல பிரிட்டன் நிறுவனங்கள், விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்திலேயே தங்கள் கம்ப்யூட்டர்களை இயக்கிக் கொண்டுள்ளனர். மேலும், மைக்ரோசாப்ட் விண்டோஸ் 8 சிஸ்டத்தின் அடிப்படையிலேயே, டேப்ளட் பிசிக்களையும் இயக்கும் வகையில், சிஸ்டத்தினை வடிவமைத்தது. இதனை ஒரு சிறப்பான அம்சமாக எடுத்துரைத்தது. இதன் மூலம் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். சிஸ்டத்திற்கு ஓர் அடி கொடுக்கலாம் என்று கணக்கு போட்டது. அது தப்பாகி விட்டது. இந்த வகையில் ஆப்பிள் நிறுவனம் தன் மேக் கம்ப்யூட்டர் மற்றும் ஐபேட் சிஸ்டங்களிடையே வேறுபாட்டினைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த வேறுபாடுகளே, இரண்டின் வளர்ச்சிக்கும் அடிப்படையாக இருந்தும் வருகின்றன. மைக்ரோசாப்ட் எப்போதும், தன் சிஸ்டங்களில், அதி நவீன வசதிகளைத் திணிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கும். ஆனால், அவை தெளிவற்றும், திறன் குறைவாகவுமே இருக்கும். விண்டோஸ் விஸ்டா வெளி வந்த போது, விட்ஜெட் என்ற வகை வசதிகள் இந்த வகையில் இருந்தன. இவை டெஸ்க் டாப்பில் பார்ப்பதற்கு எடுப்பாக இருந்தன. ஆனால், திறனில் கோட்டைவிட்டன. ஆபீஸ் தொகுப்பில் காணப்படும் புதிய ஐகான்களும் இதே போல, சிஸ்டத்தின் செயல் திறனை முடக்கிப் போட்டன. விண்டோஸ் 8 பொறுத்தவரை, அது டச் ஸ்கிரீன் செயல்பாடு மற்றும் டெஸ்க்டாப் வகை செயல்பாடு என இருவகைக்குமாக அமைக்கப்பட்டு தரப்பட்டுள்ளது. சில புரோகிராம்கள் தொடுதிரை செயல்பாட்டில் இயங்குகின்றன. சில டெஸ்க்டாப் வகையில் மட்டுமே இயங்குகின்றன. இதனால், இரு வண்டிகளில் பயணிக்கின்ற அவஸ்தையை மக்கள் அனுபவித்தனர். பலர் எந்த வண்டியும் வேண்டாம்; பழைய வாகனமே போதும் என விண்டோஸ்7 பக்கம் திரும்பினர். புதியதாக விரைவில் வெளியிடப்பட இருக்கும் விண்டோஸ் 8.1 மேம்படுத்தப்பட்ட சிஸ்டத்தில் இந்த குறைகள் களையப்பட்டுக் கிடைக்கும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

1 கருத்து: